கண்ணீரின் இடையில்
பிறக்கிறது காதல்;
முட்களின் மத்தியில்
பூக்கிறது ரோஜா!

விழியோடு ஒட்டி
உறவாடி உயிரோடு
பேசியிருந்தவனை கலைத்துப்போட்டது
அவரின் குரல்!

என்ன கேட்டார்
ஏது பேசினார் என
அறியா நிலையில்
என்ன கேட்டீங்க
எனத் தடுமாறி
அசடு வழிய கேட்க
அவள் இதழ் சிந்திய
புன்னகை காதோடு
பேசியது கேலி மொழி!

அடுத்து என்ன படிப்பதாய் உத்தேசம்?
மதிப்பெண் பார்த்துதான் முடிவு.
அவளும் அப்படித்தான் சொல்லுறா
நல்லா எழுதியிருக்கியா?
ம் நல்லா எழுதி இருக்கேன்.

அறிந்த மொழியெல்லாம்
அறிவிலிருந்து அவசரமாய் அழிந்திட
அரைகுறையாய் வந்தன
வார்த்தைகள் மட்டும்;

என்ன புத்தகம் படிப்பாய்?
எதுவானாலும் சரி
‘ப்ரியா’ அந்த புத்தகம் முடித்துவிட்டாயா?
ம் முடிச்சுட்டேன்ப்பா
சரி அதை கொண்டுவந்து தம்பிக்கு தா
அப்பா எழுந்து சென்றிட

அடடா தேவதை படித்த புத்தகமா?
தேவதை கண்கள் வருடிய புத்தகமா?
கனவில் ஆழ்ந்திருந்தேன்.

அமைதியான நீர்நிலையில்
சலனம் உண்டாக்கும் இலையென
உன் குரல்
கனவின் இழை அறுக்க

கையில் தந்தாய் தண்ணீர் தேசம்
மீண்டும்
பயணிக்கத் தொடங்கினேன்
என் கனவு தேசம் நோக்கி!

nantri piriyan

0 comments:

Design by Blogger Templates