எனக்கான நீ
நினைவுகளின் விசும்பினின்று நீ
நித்தமும் மழை பொழிகிறாய்
தீர்க்கையின்றி நானிருக்கையில்
தீநுரையாய் வந்து போகிறாய்...
வசந்தம் வந்தெதிர்பார்க்க
வாழ்க்கைக் கடலில் நீந்தலானோம்
காத்திருப்பு தாளாமல்
கல்யாணம் எதிர் கொண்டோம்
ஓதவனம் தாண்டி- வாழ்க்கை
ஒளி சேர்க்க சென்று விட்டாய்
ஓமிடி வருவதறியாமல்
ஓகையில் தான் திளைத்திருந்தோம்
தொலைபேசியில் வாழ்வு கண்டோம்
ஒருவருக்கொருவர் ஒருவாமை இல்லாமல்....
ஒரு கால் நீ போகாமலிருந்திருந்தால்
ஓராயிரம் இன்பங்கள் காலடியில்...
வரும் நாளை எதிர் பார்த்து
வாயிலில் நின்றிருந்தேன்
வருடம் போனது தெரியவில்லை
வயிறும் பெருத்து போனதடா
வளை சூட நாள் பார்த்து
தொலைபேசியில் ஒலி கண்டாய்
தொப்புள் கொடி அறும் முன்னே
என் முன்னே நீ இருந்திடடா
பிள்ளை அழுகுரல் கேட்டவுடனே
உன் வதனம் என் முன் ஆடும்...
கிலேசத்துடன் நானிருந்தேன்
மயங்கிய நிலையினளாய்
எண்ணியது நடவாமல்...
வீடு வருவாய் என்றிருந்தேன்...
நம் குலக்கொழுந்தோடு
என்றுமில்லாமல்...
எனக்கான நீ
சுவற்றில் காத்திருந்தாய்...
நிழற்படமாய்
என் குங்குமம்
தாங்கியபடி....
Posted at 7:11 AM | Labels: காதல் கவிதை. |
0 comments:
Post a Comment