காதல் கதை
காதல் கதை என்று எனது கதைக்கு தலைப்பிடுவது பொய்யாகிப்போய் விடும்... காதல் கதைகள் என்று பன்மைப்படுத்தப்படுவதே சரியானது... ஒன்பதாம் வகுப்பில் காதலித்த பெண்ணுக்கு ஒரு பொறியியலாளர் கணவராகிவிட்டார்.. பதினொன்றில் காதலித்த பெண் பற்றி இன்றுவரை தகவல் இல்லை.. பதின்மூன்றில் காதலித்தவளை எனக்கே பிடிக்கவில்லை.. பல்கலைக்கழகத்தில் என்னை காதலித்த இருவருமே எனக்கு 2 வருடத்துக்கு மூத்தோர்கள்.. இருபது வயதில் ஒரு முகம் காணா இறுக்கமான காதல்...இதை மட்டும்தான் எனது கதையில் உண்மையான அன்பிலும் பிணைப்பிலும் பூத்ததொரு காதல் எனச்சொல்வேன்..(உபயம்---செல்போன்) எனது கவிதைகளின் ரசிகையாக அறிமுகமானவள்..அப்போதெல்லாம் தினகரன் வாரமஞ்சரியில் எனது கவிதைகள் தொடர்ந்து பிரசுரமாகி வந்த மல்லிகை நாட்கள்..கிறுக்கல்கள் பிரசுரமாவதாக சக நண்பர்கள் கிணடலடித்த நிலையில் இரத்தினபுரியிலிருந்து ஒர மடல்..."காதலிக்கிறேன்..உங்கள் கவிதைகளை.."என்று அவள் எழுதிய வரிகளை இதுவரை நான் குறைந்தது மூன்று லட்சம் தடவைகளாவது படித்திருப்பேன்... அதுதான் எனது கவிதைகளை பாராட்டி வந்த முதல் மடல்..அதில் அவள் உயிர் செதுக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தேன்..(பாராட்டுக்களை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப்போது வாய்க்காததால் வந்த வினை) முடிவு...தினகரனுக்கு தபாலிட வேண்டிய எனது புதிய கவிதைகள் இரத்தினபுரிக்கு போகலாயிற்று... 180 நாட்கள்...7 மடல்கள் எங்கள் சொந்த விடயங்களின் சகலமம் பரிமாறப்பட்ட பிறகுதான் முதல் முதலில் தொலைபேசியில் உரையாடினோம்...(2005-06-04) அவள் குரல் சத்தியமாய் என்னைக்கவரவில்லை..இருந்தும் குயில் போல (எல்லோரும் சொல்லும் பொய்தான்...இந்த விடயம் நல்லவேளை குயிலுக்கு தெரிய வாய்ப்பில்லை)என்று நான் சொன்னதை அவள் நம்பவில்லை.. பிறகு மடல்கள் பரிமாறப்படவில்லை..தொலைபேசியில் தேவையற்ற எல்லாமம் பேசத்தொடங்கினோம் காதலர்களைப்போல..(பிறகு..வேற சொல்லுங்க..மௌன இடைவெளிகள்..விஷேஷம்..?? நலமா..?ஹலோ என்று நூறுமுறை...என்ன செய்றீங்க என்று திரும்பத்தீரும்ப) பேசலானோம்... எஸ்.எம்.எஸ் இன் துணையுடன் காதலையும் பகிர்ந்துகொண்டோம்...நல்லவேளை இதற்கு முன் அவளும் ஒருத்தரை விரும்பியிருக்கிறாள்..அதனால் எனது பழைய காதல்களைப்பற்றி அவள் அலட்டிக்கொள்ளவேயில்லை... 5 மாதங்கள் ஒருவரை ஒருவர் பாராமல் நல்லதொரு காதல் எங்களை ஆசிர்வதித்திருந்தது.. கொழும்பில் ஒருமுறை இருவரும் சந்திப்பதென்று முடிவெடுத்து 10 செக்கன் மட்டுமே பார்த்துக்கொண்டோம்..அவள் தாயுடன் சொப்பிங் வந்திருந்தாள்..அவள் சொன்ன நேரத்தில் அவள் சொன்ன இடத்தில் அவள் சொன்ன ஆடை நிற அடையாளத்தில் அப்போது இருந்த ஒருவளை அவளாக இருக்கக்கூடும் என்கிற ஊகத்தில் பார்த்துக்கொண்டோம்..அவளும் என்னை ஊகத்திலேயே பார்த்திருக்கிறாள்..நான் அவளுக'கு கொடுப்பதற்கென்று வாங்கிய அன்பளிப்பு இப்போதும் என்னிடமுண்டு..பின்னர் தொலைபேசியில் ஊகத்தை தெளிவாக்கிய பிறகுதான் சரியாகத்தான் அடையாளம் கண்டோம் என்று திருப்திப்பட்டோம்..அழகாகத்தான் இருந்தாள் அவள் தாயைப்போலவே..(?????????) நாட்கள் நகர்கின்றன..காதலின் உள்ளார்ந்த அர்த்தத்தையும்..அதன் படிமங்களையும் தொடர்ந்து கற்றுக்கொண்டிருந்தேன்..அவளின் தூய அன்பின் வழியாக... நாட்கள் நகர்கின்றன.. கனவுகளின் வாசலில் ஒவ்வொரு வினாடியும் கற்பனைக்கோலம் போட்டுக்கொண்டிருந்தேன்...அவள் மனைவியாக நான் கணவனாக....வாழ்வின் எல்லை வரை(நன்றி-வைரமுத்து) நாங்கள் இருவரும் மட:டம் தனித்து வாழ்வதாக நிறைய கற்பனைச்சிறகுகள் ஒரே ஒரு மாறுதல்...அவள் பற்றியோ..அவள் அழகைப்பற்றியோ ஒரு கவிதைதானும் அந்த சர்க்கரைப்பொழுதுகளில் நான் எழுதவில்லை..(அவளைப்பிரிந்த பிறகு எழுதிக்குவிக்கிறேன் என்பது வேறு கதை).. எங்கள் இருவருக்குமிடையலான காதலில் புயல் வீசத்தொடங்கிய அந்த சித்திரை மாதத்தின் முதல் தினம் விடிகிறது.. எனது வாழ்க்கையில் பாரிய சரிவொன்று எனக்காக காத்திருந்ததை எந்த அசரீரியும் எனக்குச்சொல்லவில்லை. .தாங்கவொண்ணா பிரிவு பற்றி இன்று வரை நான் எழுதும் கவிதைகள் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு முன்பு நேர்ந்த கொடூர வலிகளின் பூகம்ப அதிர்வுகளே... மீள முடியாத அந்தப்பிரிவு எதனால்..?ஏன்..?யாரால...?எப்படி..?இப்பொழுது அவள் எங்கே..?காதலுக்கு என்ன ஆனது..?எல்லாமும் சொல்வேன்...சற்று பொறுங்கள்...
Posted at 1:20 AM | Labels: காதல் கதை |
0 comments:
Post a Comment