நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!
*
இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.
*
யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்.
*
உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்
எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட
சிறகடித்து தவிக்கும் இமைகள்!
*
தனியே நீ முணுமுணுக்கும்
இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்
இனிமை இழப்பதேன்?
Posted at 8:08 AM | Labels: காதல் கவிதை |
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment