இதுதான் காதல்


தென்றலுக்கோ மலர்மீது தீராக் காதல்
தேன்சுரக்கும் மலருக்கோ வண்டில் காதல்
தென்றலோ காதலால் பூமீது மோதும்
தெரிந்தாலும் வண்டந்த வண்டோடு போகும்!

சலசலக்கும் அருவிக்கோ நதியில் காதல்
சஞ்சரிக்கும் நதியதற்கோ கடலில் காதல்
அருவிதினம் ஊற்றெடுத்து நதியில் பாயும்
அலைகடலில் தலைவைத்து நதியும் சாயும்!

பஞ்சுநிகர் முகிலதற்கோ நிலவில் காதல்
பனிபடர்ந்த மலைமீதே நிலவின் காதல்
கெஞ்சிமுகில் சிலவேளை நிலவைப் பார்க்கும்
கொஞ்சிவிட நிலவந்த மலையை நோக்கும்!

இமைகளுக்கோ கண்மீது இருக்கும் காதல்
இருவிழிக்கும் அதைமீறி அப்பால் காதல்
இமைமூடித் தனையந்த விழிக்குக் காட்டும்
இருவிழியும் அதைவிட்டு வெளியே நோக்கும்!

வான்மழைக்கு நிலன்மீது வளரும் காதல்
வன்நிலமோ நெருஞ்சிக்கே மார்பு காட்டும்
வான்மழையின் மென்துளியை விரும்பா மண்ணோ
வளர்நெருஞ்சி முட்கீறும் நோவுக்கு ஏங்கும்!

தனையடக்கித் திசைவகுக்கும் துடுப்பைக் காவிக்
காதலித்து மகிழ்ந்திருக்கும் ஓடம் என்றும்
அலையெனும்கை மெதுவாக எடுத்து ஏந்தும்
ஆறுகளைப் பார்க்காது இதுதான் காதல்!

0 comments:

Design by Blogger Templates